மதுரை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதாகி சிறையில் உள்ள பாஜ பொருளாதார பிரிவு மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா, ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் அரசியல் பிரமுகர் என்பதால் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, ‘‘வழக்கின் தன்மைகள், சாட்சியம் மற்றும் ஆவணங்களை மட்டும் தான் நீதிமன்றம் பார்க்கும். எனவே, நீதிமன்றத்தில் அரசியல் பற்றி பேச வேண்டாம். இந்த வழக்கின் விபரங்கள், வாக்குமூலங்களை பார்க்கும்போது குற்றம் செய்ததாகவே தெரிய வருகிறது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார்களா என்பதை பொறுத்து ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்’’ எனக் கூறி, விசாரணையை மார்ச் 14க்கு தள்ளி வைத்தார்.