ஹேமா கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி வல்சலாகுமாரி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த கமிட்டி 60க்கும் மேற்பட்ட நடிகைகள், நடிகர்கள், கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இந்த அறிக்கை கேரள அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் சமீபத்தில் வெளியான இந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் உள்பட துன்புறுத்தல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியான அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த பெயர், விவரங்கள் எதுவும் இல்லை. இந்த அறிக்கை வெளியான பின்னர் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இதுதொடர்பான புகார்களை தொடர்ந்து பிரபல நடிகர்களான சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு, டைரக்டர்களான ரஞ்சித், பிரகாஷ், ஸ்ரீகுமார் மேனன் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டு வருவது மலையாள சினிமா துறைக்கு பெரும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஹேமா கமிட்டியில் இடம்பெற்றிருந்த நடிகை சாரதா கூறியது: சினிமாத் துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் புதிது அல்ல. என்னுடைய காலத்திலும், எல்லா காலத்திலும் இருந்தது. முன்பு இதுகுறித்து வெளிப்படையாக கூற நடிகைகள் பயந்தார்கள். ஏதேனும் பிரச்னை ஆகி விடுமோ என்றும், நல்ல பெயர் போய்விடுமோ என்றும் அஞ்சினர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதுதொடர்பாக வெளியே சொல்லாமல் மவுனமாக இருந்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. கல்வி அறிவு பெற்ற பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்கின்றனர். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர் சில நடிகைகள் கூறும் புகார்களில் உண்மை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அது வெறும் ஒரு ஷோ என்றே கருதுகிறேன்.
ஹேமா கமிட்டி அறிக்கையை தாக்கல் செய்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. அதில் என்னென்ன உள்ளன என்பது குறித்து எனக்கு ஞாபகம் இல்லை. நீதிபதி ஹேமாவுக்குத் தான் அனைத்தும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
பழம்பெரும் நடிகை ஷீலா கூறியது: நான் மலையாள சினிமாவில் நடித்தபோது எனக்கு மோசமான அனுபவங்கள் எதுவும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிலருக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து அவர்கள் பேசிக் கொள்வதை கேட்டுள்ளேன். அப்போதெல்லாம் இது தொடர்பாக வெளிப்படையாக கூற எந்த வாய்ப்புகளும் கிடையாது. இவ்வளவு பேர் உள்ளபோது சில நடிகைகள் குறிப்பிட்ட சில நடிகர்களின் பெயரை மட்டும் ஏன் கூறுகிறார்கள் என தெரியவில்லை. குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். மலையாள சினிமாவில் நடிகைகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை நியமித்த கேரள அரசை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.