கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு மருத்துவர்கள் கடந்த 21 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வகை செய்யும் மசோதாவை அரசு நிறைவேற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.
இதற்காக மேற்கு வங்க சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 2ம் தேதி கூடுகின்றது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் சோவன்தேப் சட்டோபத்யாய் கூறுகையில், ‘‘செப்டம்பர் 2ம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் கூடுகின்றது. பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கும் மசோதா விவாதிக்கப்பட்டு செவ்வாயன்று நிறைவேற்றப்படும்” என்றார்.