திருப்பூர்: பாலியல் புரோக்கரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய 3 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், தாராபுரம் சாலை கோவில் வழியைச் சேர்ந்த 26 வயது பெண், நல்லூர் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது கணவரை 6 பேர் கும்பல் நேற்று முன்தினம் இரவு கடத்திச் சென்றதாக தெரிவித்திருந்தார். 6 பேரில் சிலர் போலீஸ் உடையில் இருந்ததாகவும் கூறியிருந்தார். இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடத்தப்பட்ட நபரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது நேற்று காலை பெருமாநல்லூர் அருகே இருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கே சென்ற போலீசார் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நபர் மற்றும் அவரது நண்பரை மீட்டனர். மேலும் அங்கு இருந்த 6 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல் வெளியானது. கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஈரோட்டில் பாலியல் தொழில் புரோக்கர் ஒருவரை சந்தித்துள்ளார்.
அப்போது வாலிபரை மிரட்டி சில புரோக்கர்கள் சேர்ந்து ரூ.60 ஆயிரம் பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் கோவில் வழியைச் சேர்ந்த கடத்தப்பட்ட புரோக்கரும் ஒருவர். இதனால் அவரிடமிருந்து பணத்தை பெறுவதற்காக போலீஸ் நண்பர்களுடன் அந்த வாலிபர் திருப்பூர் கோவில் வழி பகுதிக்கு சென்றார். அங்கிருந்த புரோக்கரை மிரட்டி 2 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் புரோக்கர் மற்றும் அவரது நண்பரை காரில் கடத்திச் சென்று பெருமாநல்லூர் பகுதியில் அறையில் வைத்து தாக்கி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33), நீலகிரி மாவட்டம் தேவாலா சோலூர் மட்டம் போலீஸ்காரர் லட்சுமணன் (32), இவர்களின் நண்பர்களான சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ராசிபுரத்தைச் சேர்ந்த ஜெயராம் (20), ஹரீஸ் (25), அருண்குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் போலீஸ்காரர்கள் 3 பேரும் 2011ல் பணிக்கு சேர்ந்தவர்கள்.