சென்னை: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், பருவ மழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் கடந்த சில தினங்களாக ஆவடி மாநகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக, ஆவடி ஜெ.பி., எஸ்டேட், சரஸ்வதி நகர், குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணி நேற்று நண்பகல் நடந்தது. இதில், ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் ஜெட்டிங் இயந்திரம் மூலமாக பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் ஆவடி அருந்ததிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (25) என்ற வாலிபர் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார். உடனே சக பணியாளர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மீட்க முடியவில்லை. பிறகு ஆவடி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்புத்துறையினர் கோபிநாத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தீயணைப்பாளர் இளவரசன் முன்னெச்சரிக்கையாக பிரீத்திங் உடை அணிந்து, 20 அடி பாதாள சாக்கடைக்குள் இறங்கி கோபிநாத்தை மீட்டார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கோபிநாத்தை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் அய்மான் ஜமால், காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், ஆவடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி வருவாய்த் துறை ஆய்வாளர் மோகனா மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கோபிநாத்துக்கு தீபா என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கோபிநாத் கடந்த 4 ஆண்டுகளாக ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.