Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய கழிவு நீர்

ஊட்டி : ஊட்டியில் தொடர் மழை காரணமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து நகர் முழுவதும் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதுதவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரில் தூய்மை பணிகள், வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஊட்டி நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

மொத்தமுள்ள 36 வார்டுகளில் 25க்கும் மேற்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 13 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள சிறிய நகரம் என்பதாலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதாலும், ஊட்டியில் ஒரு நாள் மழை பெய்தாலும் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.

இந்நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக முன்கூட்டியே பருவமழை துவங்கியது. இதனால் கடந்த 6 நாட்களாக ஊட்டியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் பார்க்கும் இடம் எல்லாம் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை நீரும் கலந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது.

குறிப்பாக ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலை, சேரிங் கிராஸ் பகுதி, மருத்துவமனை சாலை, தாவரவியல் பூங்கா பகுதி என பல இடங்களிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதேபோல எல்க்ஹில் சாலையில் இருந்து ஊட்டி பஸ் நிலையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடியது.

இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உண்டாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஊட்டியில் கோடை சீசன் நேரத்திலும், மழை பெய்யும் நேரத்திலும் பாதாள சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இவை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில், பாதாள சாக்கடை குழாய்கள் சுமார் 6 இன்ச் சுற்றளவில் உள்ளது. இது அன்றைய சூழ்நிலையில் ஊட்டியில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஊட்டியில் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதால், கழிவுநீர் அதிகளவு சேகரமாகுகிறது.

எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பு மற்றும் மண் மூடிய கால்வாய்களை சீரமைக்க வேண்டும். ஓட்டல்களில் நாப்கின்களை கழிவறை குழாய்களில் போடக்கூடாது‘‘ என்றார்.