காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் மண்டிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி திடீர் என பஞ்சராகி நின்றதால், பாலாறு மேம்பாலம் பகுதியில் இருந்து செவிலிமேடு சந்திப்பு வரையும், மற்றொரு புறம் திருவண்ணாமலை மாவட்டம் தூசி பகுதி வரை இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் 3கிமீட்டருக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், அலுவலகம், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் இந்த மேம்பாலத்தின் வழியாகவே செல்கின்றன.
மேலும், புஞ்சை அரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால், அதிகளவில் டூவீலர்களில் வந்து செல்கின்றனர். மேலும் காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது.
இங்கு எண்ணற்ற பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த, தொழிற்சாலைகளுக்கு ஆள்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இதனால் பாலாற்று பாலத்தில் இருந்து கீழம்பி வரையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைக்கு செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த மேம்பாலத்தின் வழியாக பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பாலத்தின் மீது சென்ற கனரக வாகனத்தில், பின்புறம் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. பாலாற்று மேம்பாலத்தில் மண் குவாரி, கருங்கல் குவாரி லாரிகள் அதிகளவில் செல்வதால் அடிக்கடி சேதமடைகிறது. புஞ்சை அரசன்தாங்கலில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும்போது, இடதுபுறம் சேதமடைந்து டூ வீலர்களில் சென்றால் தடுமாறி விழக்கூடிய நிலையில் உள்ளது.
மேலும், நேற்று காலை மண்டிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியின் டயர் பஞ்சராகி நின்றதால், பாலாற்றின் இருபுறமும் சுமார் 3 கிமீ தூரத்திற்கும் மேலாக பள்ளி பேருந்துகள், தொழிலாளர்களை ஏற்றிவந்த வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள், அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள், தனியார் நிறுவன தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைவரும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், போக்குவரத்தை சரிசெய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதேபோன்று ஒரு விபத்து ஏற்பட்டத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* கூடுதலாக மேம்பாலம் கட்ட வேண்டும்
மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப செவிலிமேடு பாலாற்றில் கூடுதலாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த, பாலாறு மேம்பாலத்தை தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. எனவே, தேவைக்கேற்ற 4 வாகனங்கள் சென்று வரும் வகையிலோ அல்லது புதிதாக மேலும் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.