காசா: காசா மீது இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதல்களால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலக நாடுகளின் உதவி பொருட்களை குறைந்த அளவிலேயே காஸாவுக்குள் இஸ்ரேல் அனுமதிப்பதால் ஒரு வேலை உணவுக்கு கூட மக்கள் போராடும் சூழல் உள்ளது. இந்நிலையில் காஸாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரத்தில் உள்ள ஐநாவின் நிவாரண முகாமை நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்கள் முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கோதுமை மாவு, அரிசி, குடிநீர் பாட்டில்களை அவர்கள் அள்ளி சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஐநா பாதுகாப்பு காவலர்கள் கூட்டத்தை கலைத்தனர். ஐநா சபையின் நிவாரண முகாமை மக்கள் சூறையாடிய நிலையில் காஸாவில் நிலவும் உணவு பஞ்சத்த்தின் தீவிரத்தை உலகிற்கு உணர்த்துவதாக இருக்கிறது. இந்நிலையில் காஸாவில் உணவு பொருள் விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.