சென்னை: வா.மு.சேதுராமனை கவுரவிக்கும் வகையில் அரசு மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மறைந்த கவிஞர் வா.மு.சேதுராமனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த தமிழறிஞரும் கவிஞருமான கலைமாமணி கவிக்கோ வாமு. சேதுராமன் 04.07.2025 அன்று அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து, அவரின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (05.07.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்துள்ளவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன். மேலும், அவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பெருங்கவிக்கோ என்று அனைவராலும் அறியப்பட்ட மூத்த தமிழறிஞர் கலைமாமணி வா.மு. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.