சேத்தியாத்தோப்பு : கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வெய்யலூர், வாழைக்கொல்லை, ஓடாக் கநல்லூர், வடப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகளை காலங்காலமாக விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.
இப்பகுதிகளில் 500 ஏக்கருக்குமேல் கடந்த காலங்களில் பயிரிட்ட நிலையில் தற்போது 300 ஏக்கராக குறைந்துவிட்டது. பன்னீர் கரும்புகளுக்கு போதுமான விலை இல்லாததால் விவசாயிகள் இதனை பயிரிடுவதை குறைத்துவிட்டனர்.
பொங்கல் பண்டிகையின் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படும் இந்த கரும்பானது தற்போது அதனை பயிரிடும் விவசாயிகளுக்கு கசப்பை ஏற்படுத்தி வருகிறது. 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த கரும்பானது அறுவடையின்போது போதுமான விலை இல்லாமல் போகிறது.
இதனால் இதனைப் பயிரிட்ட விவசாயிகள் தற்போது மாற்று பயிருக்கு மாறிவிட்டனர். இருந்தாலும் பாரம்பரியமாக பயிர் செய்து வரும் விவசாயிகள் இன்னமும் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். தற்போது கரும்பு பயிரிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு முறையான வழிகாட்டலும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். பன்னீர் கரும்புக்கு பயிர் காப்பீடும் செய்ய வேண்டும். மொத்தத்தில் வேளாண்மை துறை பட்டியலில் இந்த கரும்பு இல்லை எனவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் பாரம்பரிய கரும்பு சாகுபடி அதிகரிக்க போதுமான வழிகாட்டல் மற்றும் நிதி உதவி, பயிர் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவசாயிகளுக்கு அதிகாரிகள் செய்து கொடுத்தால் விவசாயிகள் மீண்டும் அதனை பயிரிடுவதை அதிகப்படுத்துவார்கள் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.