*அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு
தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் எள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமான நிலையில், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், திருமானூர் ஒன்றியங்கள் டெல்டா பகுதியாக விளங்கி வருகின்றன. குறிப்பாக இரண்டு ஒன்றியங்களிலும் பிரதான தொழிலாக பயிர் செய்வது சம்பா பயிர் மட்டுமே.
இதன் ஒரு பகுதியாக தற்போது எண்ணெய் வித்து பயிர்களில் ஒன்றான எள் சாகுபடியை கடந்த சில மாதங்களுக்கு முன் பயிரிட்டனர். தா.பழூர் ஒன்றியத்தில் தென்கச்சி பெருமாநத்தம், மேலக்குடிகாடு, கீழக்குடிகாடு, அன்னகாரன் பேட்டை, இடங்கண்ணி, அடிக்காமலை, கோடாலிகருப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்படு இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் தயராக இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 1000 ஏக்கருக்கு மேல் எள் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. போதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் வெளியில் செல்ல முடியாமல் எள் பயிர்கள் அழுகி அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் இதனையடுத்து, அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கீதா தலைமையிலான வேளாண் துறை அதிகாரிகள் மழைநீரில் மூழ்கிய எள் பயிர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் வேளாண்மை துணை இயக்குனர் கணேசன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரவி, வேளாண்மை அலுவலர் தமிழ்மணி, துணை வேளாண்மை அலுவலர் ராஜதுரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வ பிரியா, தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது, எள் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
எள் சாகுபடி பயிர்களில் தேங்கியுள்ள நீரை வடிய செய்வதற்கான வழிமுறைகளை விவசாயிகளிடம் வழங்கினர். மேலும் எள் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை வருவாய்த்துறைடன் சேர்ந்து இழப்பீடு வழங்க கணக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.