சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: வணிகர் செலுத்தும் வாடகைக்கும், வணிக கட்டிடங்களுக்கான வாடகை பெறுபவருக்கும் ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு இருக்கிறது. குறிப்பாக உணவக கட்டிடங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை உணவக வணிகர்கள் 2017ல் இருந்து செலுத்தி வருகிறார்கள். அதை திரும்பப்பெற நிதியமைச்சருக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
இணக்க வரி செலுத்துகின்ற வணிகர்கள் இதனால் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி. தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு படி, சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்களும் வாடகை மீதான ஜிஎஸ்டி வரி, சேவை வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட வாடகை மீதான சேவை வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது.