Sunday, September 24, 2023
Home » உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுகளை வழங்காதீர்…

உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அச்சிடப்பட்ட தாள்களில் உணவுகளை வழங்காதீர்…

by Lakshmipathi

*வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

மதுரை : வயிற்றுப்போக்கு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், கடைகளில் அச்சிடப்பட்ட தாள்களில் வடை, பஜ்ஜி உள்பட தின்பண்ட பொருட்களை கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுகள் உணவகங்களில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பண்டங்களை கடைகளில் அச்சிடப்பட்ட தாள்களில், வைத்து கொடுப்பதால் அதிலுள்ள எழுத்துகளின் வேதிப்பொருட்கள் உணவு பொருட்களில் படிந்து அவற்றை சாப்பிடும் மக்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணத்தால் பலருக்கும் வயிற்றுப்போக்கு, புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, அச்சிடப்பட்ட தாள்களில் உணவை பொட்டலம் செய்து விநியோகிப்பதை தடுக்க அரசு சார்பில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் விதிகளை மீறி அச்சிடப்பட்ட தாள்களில் உணவு பொருட்களை கொடுக்கும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அன்றாட உணவு முறைகளில் சிறுதானிய உணவு வகைகள் எடுத்துக் கொள்வது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவின் தரம், சுகாதாரம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் ஆய்வு மேற்கொள்வதுடன், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து மதுரை நகர் கடைகளில் உணவின் தரம், சுகாதாரம், தடை செய்த பிளாஸ்டிக் பை உபயோகம், அச்சிடப்பட்ட தாள்களில் உணவு பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமையில் அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதன்படி பல்வேறு பகுதிகளிலும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் அரசு விதிகளை மீறிய கடைகளுக்கு, விதிமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறும்போது, ‘‘கடைகளில் அச்சிடப்பட்ட தாள்களில் வடை உள்ளிட்ட தின்பண்டங்களை வைத்து சாப்பிட வழங்குதல் மற்றும் பார்சல் செய்து கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.
ஏனெனில் அச்சிடப்பட்ட தாள்களில் இருக்கும் மையில் ரசாயனம் கலந்திருக்கும். இந்த ரசாயன பொருட்கள் உணவு பண்டங்களில் எளிதில் சேர்ந்து விடும்.

இதுபோல் சேரும் ரசாயன பொருட்கள் அந்த உணவு பண்டங்களை சாப்பிடுவோரின் உடலில் சேரும். இதனால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற நடவடிக்கை தொடர்வதை தடை செய்ய தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். அவற்றை பின்பற்றாதவர்கள் மீது திடீர் சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பலருக்கும் இந்த பாதிப்பு குறித்து விழிப்புணர்வு இல்லை. கடைகளில் உணவு பண்டங்களை வாங்கும்போது, இதுபோல் அச்சிடப்பட்னட காகிதங்களில் அவற்றை கொடுக்காதீர்கள் என்று பொதுமக்கள் கூற வேண்டியவது அவசியம்.

இதுபோன்ற நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படுவது அவர்களுக்குத்தான். குறிப்பாக குழந்தைகள் இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள ரசாயனங்கள் வடை, பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட எண்ணெய் சார்ந்த பொருட்களில் எளிதில் சேர்ந்துகொள்ளும். அவற்றை சாப்பிட்டால் அந்த ரசாயனங்கள் உடலுக்குள் சென்று பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பின்னர் அவர்கள் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை உருவாகும்.

எனவே பொதுமக்கள் தாங்கள் வாங்கும் கடைகளில் உணவு பொருட்களை இலைகளில் வைத்து தரும்படி கோரிக்கை விடுக்க வேண்டும். காகித தட்டுக்கள் இருந்தாலும் அதன் மீது இலையை வைத்து உணவை வழங்க வேண்டும். இதை மீறும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?