பெரம்பூர்: கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த சாய்ஷாம் (24), கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த கிஷோர் (20), திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த பிரபு (38), ஆகியோரிடம் நேற்று முன்தினம் மர்ம நபர் செல்போனை பறித்து சென்றார். இதேபோல், கடந்த 10 நாட்களில் மேலும் 3 பேரிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
இதையடுத்து எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் வரதராஜன் மேற்பார்வையில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், அந்த நபர் 2 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
விசாரணையில், வியாசர்பாடி எம்கேபி நகர் 18வது தெருவை சேர்ந்த அப்பு (எ) பிரகாஷ்ராஜ் (22), தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 6 செல்போன்களை வழிப்பறி செய்ததையும் ஒப்புக்கொண்டார். இவரிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செயய்தனர். பின்னர், அவரை சிறையில் அடைத்தனர்.