புதுடெல்லி: பருவமழையின் போது திறந்து விடப்பட்ட உபரி நீரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீராக எடுத்து கொள்ள கூடாது என்று காவிரி ஆணைய கூட்டத்தில் தெரிவித்த தமிழ்நாடு அதிகாரிகள், செப்டம்பர் மாதத்துக்கான 36.7 டி.எம்.சி தண்ணீரை தாமதம் இல்லாமல் திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 33வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு அரசு தரப்பில் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மணிவாசன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கர்நாடகா அரசு பிரதிநிதிகள், “காவிரியில் இருந்து 90 டிஎம்சி-க்கு அதிகமாக தமிழ்நாட்டுக்கு நீர் திறந்து விடப்பட்டது” என தெரிவித்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அதிகாரிகள், “கர்நாடகா அணைகளில் 110 டிஎம்சிக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது. பருவமழை காலத்தின்போது அதிக மழைப்பொழிவால் கிடைத்த உபரி நீரை மட்டுமே கர்நாடகா காவிரியில் இருந்து திறந்து விட்டுள்ளது. அதனை கணக்கில் கொள்ள முடியாது. மேலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய 36.7டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர். இதையடுத்துகூட்டத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் ஒத்தி வைத்தார்.