‘‘டெண்டர் பணி எடுத்ததால விஜிலென்ஸ் பார்வையில் பிரசிடெண்ட் ஒருத்தர் சிக்கியிருக்கிறாராமே..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல இரண்டு எழுத்து இன்ஷியல் கொண்ட குப்பம் என்று முடியுற பிளாக் இருக்குது.. அந்த பிளாக்ல வில் ஏந்திய கடவுள் பெயரை கொண்டவரு பிரசிடெண்டா இருக்குறாரு.. இவர் மேல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு சோஷியல் ஆர்வலரு விஜிலென்ஸ்ல புகார் ெகாடுத்திருக்குறாரு.. அதுல, உள் ஆட்சி சட்டப்படி அந்த பிரசிடெண்டோ, அவர் பேமிலியோ டெண்டர் பணிகள்ல ஈடுபடக்கூடாதுன்னு சில விதிமுறைகள் இருக்குதாம்.. ஆனா, இவரு, தன்னோட வீட்டுக்காரம்மா பேர்ல கோடிகள்ல டெண்டர் பணியை செஞ்சிருக்காராம்.. இந்த புகார்ல விஜிலென்ஸ் பார்வை, இப்ப இரண்டு எழுத்து இனிஷியல் கொண்ட பிளாக் மேல விழுந்திருக்காம்.. அதோட விசாரணையையும் தொடங்கியிருக்காங்களாம்.. இப்ப அந்த பிளாக் பிரசிடெண்ட் தன்னோட பதவிய காப்பாத்திக்குறதுக்கு வேலை செஞ்சிட்டு வர்றாராம்.. விஜிலென்ஸ் விசாரணை முடிவுலத்தான் எல்லாம் தெரியவரும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்சி நிர்வாகிகளுக்கு சந்தேகம் வருகிற அளவுக்கு கோயில் கோயிலா சுற்றித்திரிகிறாராமே மாஜி அமைச்சர் ஒருத்தர்…’’ எனக்கேட்டார் பீட்டர்மாமா.
‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சரான ‘கர்ம வீரர்’ பெயரானவர் தற்போது பெரும்பாலும் சொந்த மாவட்டத்தில் தங்கி தொழில்களை கவனித்து வருகிறாராம்… ‘சின்னமம்மியை’ மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்னு சேலத்துக்காரரிடம் வலியுறுத்திய முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என அவ்வப்போது பேச்சும் அடிபட்டுச்சு.. இந்நிலையில், ஆடி பிறந்ததில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் மாஜி அமைச்சர் கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து வருகிறாராம்… முக்கிய தினங்களை தவிர்த்து, பிறநாட்களிலும் கூட அவர் கோயிலுக்கு சென்று வருகிறாராம்.. கோயிலுக்கு செல்லும் போது, நெருங்கிய ஆதரவாளர்களை கூட அழைத்து செல்வது கிடையாதாம்.. தனது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அழைச்சிட்டு போறாராம்.. மாஜி அமைச்சர் கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவது ரகசியமாக வைக்கப்பட்டுவதால் கட்சி நிர்வாகிகளுக்குள் சந்தேகம் எழுந்திட்டாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சிக்கு தலைவலி கொடுக்கப்போறாராமே மாஜி போலீஸ் அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மாஜி போலீஸ் அதிகாரியானவருக்கு மலராத கட்சிக்கு வந்தவுடனே கட்சியின் மாநில தலைவர் பதவி கிடைத்தது.. வானத்தை வில்லாக வளைப்பேன் என்ற அவரது மாயாஜால வார்த்தையை டெல்லி நம்பியது.. இதனால அவரது போக்குக்கு விட்டுட்டாங்க.. ஆனால் தேர்தல் ரிசல்ட் பூஜ்ஜியமாகி போச்சு.. இதனால ஒன்றியத்ைத மெஜாரிட்டியோட ஆளமுடியாம, மைனாரிட்டியா தவித்துக்கிட்டிருக்காங்க.. அவரால் பாதிக்கப்பட்ட ரெண்டாங்கட்ட நிர்வாகிகள் மேலிடத்தில் நிஜ தகவலை தெரிவித்த பிறகே அவர்களுக்கு உண்மை தெரிந்ததாம்.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற நிலை ஏற்பட்டுப்போச்சாம்.. இதனால மாஜி தலைவரை மாற்றிட டெல்லி ரொம்பவே தீவிரமாக இருக்காம்.. எனவே ஷாக்கான மாஜி போலீஸ் அதிகாரியோ, மீண்டும் ஒரு முறை காலநீட்டிப்பு கொடுங்கன்னு கேட்டாராம்.. ஏற்கனவே ஒரு ஆண்டு அதிகரிச்சி கொடுத்தும் எந்த பயனும் இல்லைன்னு கை விரிச்சிட்டாங்களாம்.. இதனால லண்டனுக்கு அரசியல் படிக்க போறேன்னு சொல்லிட்டாராம்.. தனது சமூக வலைதள வார் ரூம்களை வைத்து அவர் நல்லவர், வல்லவர், தூய்மையானவர், அவரால்தான் தாமரையை மலர வைக்கமுடியுமுன்னு புரளிய கிளப்ப வச்சிருக்காராம். அவரது ஆதரவாளர்களும் தங்களால் முடிந்தவரையில் அவரை புகழ்ந்துக்கிட்டிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க..
மாநில தலைவர் பதவியை அவரால் விட்டுக்கொடுக்க முடியலையாம்.. இத நம்பித்தான் அதிகாரி வேலையை உதறி தள்ளிட்டு வந்தேன். எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்னு அவர் மார்தட்டி வருவதாக பேசப்பட்டு வருது.. அவரது ஆதரவாளர்கள் புதுத்தகவலையும் சொல்றாங்க… மாநில தலைவர் என்ற பவர்புல் அதிகாரத்தில் இருந்துவிட்டு திடீரென வெளியே போ என்றால் யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்? அரசியல் படிப்பை முடித்து விட்டு வரும்போது அவருக்கு ஒன்றிய மந்திரி பதவி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் தன்மானத்தோடு வாழுவேன் என்ற கோஷத்துடன், தனி அமைப்பு ஒன்றை தொடங்குவார். காங்கிரசில் இருந்து மூப்பனார் த.மா.கா என்ற கட்சியை தொடங்கியது போன்று தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவரால்தான் தமிழ்நாட்டில் பாஜ என்ற ஒரு கட்சி இருப்பதே வெளியே தெரிய வந்துள்ளது. இவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு பெரும் தலைவலியாகவே இருப்பார். தனி அமைப்பை தொடங்கி மலராத கட்சியை உடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் பேசிக்கிட்டிருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரொம்ப கறாராக இருந்த பொறியாளரை மாற்றிட்டு, ஹேப்பியா ஆயிட்டாங்களாமே ஒப்பந்ததாரர்கள் தெரியுமா…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் மலையோர பகுதிகளை சார்ந்து வரும் 3 பேரூராட்சிகளில் பொறியாளர் ஒருவர் ரொம்பவே கறாராக பணியாற்றி வந்தாராம்.. ஒப்பந்ததாரர்கள் கோல்மால் செய்து இவரிடம் பில்களை பாஸ் செய்ய முடியாதாம்.. இது ஒப்பந்ததாரர்களுக்கு நெருக்கடியாக இருந்து வந்துச்சாம்.. இவரை மாற்றினால்தான் தங்களது பில்கள் 40 முதல் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு எந்த ரூபத்தில் இருந்தாலும் பாஸ் ஆகும் என்கிற முடிவுக்கு வந்தவங்க, பணிகளை குறித்த காலத்தில் முடிக்காமல் இழுத்தடித்தாங்களாம்.. சென்னையில் தொடர்புடைய உயர் அதிகாரிகளை சந்தித்து உரியமுறையில் பேசி பொறியாளரை இடமாற்றம் செய்துவிட்டு மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வசம் அண்மையில் சிக்கிய மற்றொரு பேரூராட்சியின் பொறியாளரை தங்கள் பகுதி பேரூராட்சிகளுக்கு நியமித்துள்ளார்களாம்.. இதனால் ஒப்பந்ததாரர்கள் மிகவும் ஹேப்பியாக இருக்கிறார்களாம்.. ஆனா, பணிகளின் தரம் எப்படி இருக்குமோ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது..’’ என முடித்தார் விக்கியானந்தா.