புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி போபன்னா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய அதிகாரம் இல்லை என்று தெளிவாக தெரிந்தும், அவ்வாறான நடவடிக்கை என்பது செல்லத்தக்க ஒன்று கிடையாது.
மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே 15 நாட்கள் அவரை விசாரிக்கலாம். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தை பொருத்தமட்டில் அமலாக்கத்துறை ஆரம்பத்தில் இருந்தே சட்டவிரோதமாக தான் செயல்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார். செந்தில் பாலாஜி ஒன்றும் நாட்டை விட்டு ஓடிப்போவது இல்லை. அமலாக்கத்துறை ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால் அவரை வற்புறுத்த முடியாது. இதையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று அமலாக்கத்துறை தரப்பில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை வைக்க உள்ளார்.