சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுக்காக நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக உள்ளதால் இந்த மனுவை எண்ணிடுவதற்காக தலைமை நீதிபதி முன்பு அந்த மனு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் எண்ணிடப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்படும். அதுவரை குற்றச்சாட்டுப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார்.
இதைக்கேட்ட நீதிபதி, எத்தனை முறை வாய்ப்பளிப்பது. மனு இன்னும் எண்ணிடப்படாத நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கருதி குற்றச்சாட்டு பதிவை எப்படி தள்ளிவைக்க முடியும் என்று கேட்டார். இதனையடுத்து, புதிய மனு குறித்து வாதிட அனுமதிக்க வேண்டுமென்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில் அதுதொடர்பான வாதங்கள் செந்தில் பாலாஜி சார்பில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுப் பதிவை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் சிகிச்சையில் உள்ள அவர் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரின் நீதிமன்ற காவலை வரும் 7ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.