புதுடெல்லி: செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது ஆறு மாதமாகியும் வரையில் முடிக்கவில்லை.
குறிப்பாக விசாரணையை ஒத்திவைக்கக்கோரி 13முறை செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. நாங்கள் ஒருமுறை கூட அவகாசம் கேட்கவில்லை. குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு மாநில அரசு உதவுகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட முதல் வழக்கில் 21 சாட்சியங்களும், இரண்டாவது வழக்கில் 100 சாட்சியங்களும் அதேப்போன்று மூன்றாவது வழக்கில் 200சாட்சியங்களும் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ராம்சங்கர் ஆகியோர் வாதத்தில், “அமலாக்கத்துறை இந்த வழக்குக்கு தேவையில்லாத வாதங்களை முன்வைத்து ஆரம்பத்தில் இருந்தே குழப்பி வருகின்றனர்.
கடந்த 13 மாதங்களாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து சரியில்லாத நிலையில் தான் இருந்து வருகிறது. குறிப்பாக அரசியலமைப்பு பிரிவு 21ன் படி டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது போன்று, செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். இதில் விசாரணை நீதிமன்றத்தில், தொடர்ந்து விசாரணை நடக்கட்டும். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அமலாக்கத்துறை எப்போதும் யூகத்தின் அடிப்படையில் தான் வாதங்களை முன்வைத்து வருகிறது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ செந்தில் பாலாஜிக்கு ஏன் ஜாமீன் வழங்க முடியாது. அதாவது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது போன்று செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் வழங்க முடியும் தானே?. மேலும் தற்போது விசாரணை குறிப்பு குறித்து தனியாக மனு தாக்கல் செய்கிறோம் என்று அமலாக்கத்துறை கூறுவதை எங்களால் ஏற்க முடியாது. ஏனெனில் அமலாக்கத்துறை ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வரும்போது வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்.
எங்களை பொறுத்தவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்க விரும்புகிறோம். அதன் அடிப்படையில் தான் விசாரணையும் நடக்கிறது. அமலாக்கத்துறையின் இழுத்தடிப்பு இந்த வழக்கு எப்போது முடியும் என்பதையே கேள்வியாக்கி உள்ளது. அது உங்களது நடவடிக்கையில் தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் விசாரணை ஒருபுறம் நடக்கட்டும். இருப்பினும் ஜாமீன் மனு மீது நாங்கள் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.