புதுடெல்லி: செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இதையடுத்து தற்போது வரை அவர் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து முன்னதாக கடந்த இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 12ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் மீண்டும் விசாரணை நடத்தி செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரத்தில் எந்த வழக்கை கையாள போகிறீர்கள் என்று அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி விவகாரத்தில் அனைத்து குற்றங்களையும் விசாரணை நடத்த போகிறீர்களா?. அல்லது அவர் மீதான குற்றங்களை மட்டும் விசாரணை நடத்த உள்ளீர்களா. எங்களது கேள்விக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் என்று அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேட்டனர்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை மொத்தம் 47 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக உள்ளனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பார்க்கும் போது, காவல்துறை, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துதுறை என்று பல பிரிவுகளிலும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டுள்ளது. எனவே முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து தனித்தனியாக விசாரிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்கிறார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன’’ என்று தெரிவித்தார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் நீங்கள் கூறுவது போன்று வழக்கை தனித்தனியாக விசாரிக்க முடியாது. அதற்கான முகாந்திரமும் இல்லை’’ என்று தெரிவித்தனர். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், ‘‘ஒரே வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும் என்று தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.