சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி ஏற்கனவே தாக்கல் செய்த இரு மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில், உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் 45வது பிரிவு பொருந்தாது. செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பது அவருடைய உடல்நிலைக்கு சாத்தியமில்லை என வாதிட்டார். அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் வாதிட்டார்.
சிறை மருத்துவமனையிலோ அல்லது நீதிமன்ற காவலிலோ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்ற நிலை இருந்தால் மட்டுமே மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியும். ஆனால் அது போன்ற நிலை செந்தில் பாலாஜிக்கு இல்லை. ஒரு இடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, உட்காரவோ செந்தில் பாலாஜியால் முடியவில்லை என கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு அவர் உட்கார்ந்து இருக்க வேண்டுமென யாரும் அவரை கட்டாயப்படுத்தவில்லை. செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை என்பது மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரும் பிரிவின் கீழ் வரவில்லை. ஜாமீனில் வெளியில் வந்தால் செந்தில் பாலாஜி ஆதாரங்களை கலைப்பார் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா? செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியை கலைப்பார் என அமலாக்கத்துறை கூறுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ; “நிச்சயமாக ஆதாரங்களை கலைக்க செந்தில் பாலாஜி முயற்சிக்கமாட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையிடம் இருக்கும் போது எப்படி அதனை கலைக்க முடியும். என பதிலளித்தார். இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.