திருச்செந்தூர் குடமுழுக்கு – 7.7.2025
திருச்செந்தூரின் வரலாற்றுப் பெருமை
இத்தலம் மிக மிகப் பழமையான தலம். சங்க இலக்கியங்களில் இத்தலத்தைப் பற்றிய அற்புதமான குறிப்புகள் இருக்கின்றன. “வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை என்று புறநானூறு பேசுகிறது. சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்” என்று சிலப்பதிகாரம் இதன் பெருமையைப் பறைசாற்றுகிறது .தொல்காப்பிய மேற்கோள், திருமுருகாற்றுப்படை, கந்த புராணம் ஆகிய நூல்கள் இவ்வூரை அலைவாய் என குறிப்பிடுகின்றன. சிவந்த நிறமுடைய முருகப்பெருமானாகிய சேந்தனுக்குரிய கோயில் அமைந்ததால் செந்தில் என பெயர் ஏற்பட்டு செந்தில் என மருவியது என்றும் ஒரு பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.
செந்து என்பது உயிர். உயிர்களுக்கு அடைக் கலமான இடமாக (இல் ) விளங்குவதால் செந்தில் என்று பெயர் வந்தது. திருச் செந்திலூர் மருவி திருச்செந்தூர் ஆகி இருக்கலாம். தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாலும், பெரும் பணக்காரர்களும் கட்டப் பட்டிருக்கும் நிலையில் ஆண்டிகளாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் ‘‘திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்”. இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.1. மௌனசுவாமி 2. காசிசுவாமி 3. ஆறுமுகசுவாமி (இவர் ராஜகோபுரம் கட்டியவர்) 4. ஸ்ரீவள்ளிநாயகசுவாமி 5. தேசியமூர்த்தி சுவாமி. ஐவரும் துறவிகள்.
திருச்செந்தூர்ப் புராணம்
திருச்செந்தூர் பற்றிய பல நூல்கள் உள்ளன.அவற்றுள் சில: திருச்செந்தூர்ப் புராணம், திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் தலபுராணம், திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு, திருச்செந்தூர் தலவரலாறு, ஓரெழுத்து அந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி ,வெண்பா அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து ,திருச்செந்தூர் கோவை, திருச்செந்தூர் சண்முக சதகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி மற்றும் திருச்செந்தூர் முருகனே போற்றி. இவை அனைத்தும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் சிறப்புகள் மற்றும் தலபுராணத்தை விவரிக்கும் நூல்களாகும். திருச்செந்தூர்ப் புராணம் வென்றிமாலைக் கவிராயரால் இயற்றப்பட்டது. இது திருச்செந்தூர் கோயிலின் தலபுராணத்தை விளக்கும்.
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பகழிக் கூத்தரால் எழுதப்பட்ட ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகும். இது திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட நூலாகும். அருண கிரிநாதரின் திருப்புகழ்,கந்தர் அந்தாதி முதலிய நூல்கள் திருச்செந்தூரின் பெருமையையும் அங்கு எழுந்தருளி இருக்கும் முருகனின் சிறப்புகளையும் நமக்கு எடுத்துக்காட்டும் நூல்களாகும். கந்தர் கலி வெண்பா என்பது திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனை 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார். கலிவெண்பா எனப்படும் பாடல்களினால் ஆக்கப்பட்ட இந்நூல், அப்பாடல் வகைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. சைவ சித்தாந்தக் கருத்துகளை உள்ளடக்கிய இந்நூல், முருகப் பெருமானின் தோற்றத்தைக் கேசாதி பாதமாக வருணித்து, அவரிடமிருந்து கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளவும், துன்பங்கள் அனைத்தையும் போக்கவும் வேண்டுகிறது. இந்நூலைச் சைவர்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்துவர்.
சூர சம்ஹாரம்
வேறு வழியின்றி முருகப்பெருமான் சூரபத்மன் மீது போர் தொடுக் கிறார். கடுமையான போர் நடக்கிறது. சிவபெருமானிடம் வரம் பெற்ற சூரன் மாயப் போர் புரிகிறான். நிறைவாக மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல் அவனது ஆணவத்தை அழித்து சேவற்கொடியாகவும் , மயி லாகவும் மாற்றி ஆட்கொண்டார். அதனால் முருகப்பெருமான் சேவற் கொடியோன் என்றும் அழைக்கப்பட்டார் . இந்நிகழ்விற்கு பிறகு, வியாழ பகவான் முருகப்பெருமானை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர் வியாழபகவான் உத்தரவின்படி விஸ்வ கர்மா இந்த திருக்கோவிலை கட்டினார். சூரபத்மனை அழித்ததில் முருகனின் வெற்றியின் காரணமாக, முருகப்பெருமான் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
குமார விடங்கப் பெருமான்
300 அடி நீளம் 216 அடி அகலம் அமைந்த இத்திருத்தலத்தின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்கு கோபுரம் சுவாமிக்கு எதிரே, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் போதும், முருகன் திருக்கல்யாணத்தின் போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
இனி முதல் பிராகாரத்தில் நுழைவோம்.முதல் பிராகாரத்தின் தெற்கில் ஜெயந்தி நாதர் எனும் குமார விடங்கப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகின்றார். வள்ளிக்கும் தெய்வானைக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. பிரகாரத்தின் மேற்கே சங்கரநாராயணர், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, வேதபுரீஸ்வரர், திருவாதபுரீஸ்வரர், நாகநாத சோமேஸ்வரர் என பலச் சந்நதிகளைக் காணலாம். வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், சிவகாமி – நடராஜர், சனீஸ்வரர், பைரவர் முதலியோருக்குச் சந்நதிகள் இடம் பெற்றுள்ளன சில முக்கியமான முருகன் கோயில்களில் இடம் பெற்றுள்ளவாறு இங்கும் பெருமாளுக்கு தனித் தனியாக சந்நதிகள் உண்டு. இனி இரண்டாம் பிராகாரத்தில் நுழைவோம்.
பஞ்ச பூதத் தலங்களும் ஒரே கோயிலில்
பிராகாரத்தின் மேற்கில் சித்தி விநாயகர், சகஸ்ர லிங்கம், ஆத்மநாதர், மனோன்மணி அம்மை, பானுகேஸ்வரர், சோமசுந்தரர் – மீனாட்சி அம்மை, திருமூலநாதர் சந்நதிகள் உண்டு. இது தவிர பஞ்சபூதத் திருத்தலங்களில் நான்கினை ஒரே தலத்தில் தரிசிக்கும்படியாக திருக்காளத்தி நாதர்,( வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி அருணாசலேஸ்வரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை ஜம்புகேஸ்வரர் (அப்பு லிங்கம்) வன்மீக நாதர் (பிரதிவி லிங்கம்) அருணகிரிநாதர் வல்லப கணபதி ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இது தவிர தென்பகுதியில் வாசலருகே, வீர கேசரியும் வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர் .
பன்னீர் இலை விபூதி பிரசாதம்
இந்தத் தலத்தின் சிறப்பம்சம் பன்னீர் இலை விபூதி பிரசாதம். இது வேறு எங்கிலும் இல்லாதது. இலை விபூதி பிரசாதம் என்பார்கள். காரணம், திருச்செந்தூரில் தேவர்கள் எல்லாம் பன்னீர் மரங்களாக இருக்கின்றனர். 12 முகங்களுக்கு 12 நரம்புகளைச் சொல்வார்கள். பன்னீர் மர இலைகளில் 12 நரம்புகள் உண்டு. சூரபத்மனை வதம் செய்த பின்னால் முருகப்பெருமான் 12 கரங்களாலும் விபூதிப் பிரசாதம் வழங்கியதாகவும், விஸ்வாமித்திரரின் காசநோயை 12 கரங்களால் விபூதி பிரசாதம் அளித்து நீக்கியதாகவும் , அதுவே பன்னீர் இலையின் 12 நரம்புகள் ஆக இருப்பதாகவும், சொல்கிறார்கள் கடற்கரை அருகில் உள்ள தலம் என்பதால் மீனவர்கள் செந்தில் ஆண்டவரை தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அதுமட்டுமின்றி தங்கள் குலத்தில் பிறந்த தெய்வானையை மணந்ததால், மீனவர்கள் முருகனை மச்சான் சாமி என்று பரிவோடு அழைக்கின்றனர்.
மஞ்சள் வண்ணமும் தங்கமும்
திருச்செந்தூர் குரு பகவானுக்கு உரிய தலம். வியாழபகவான் தான் இங்கு இந்த கோயிலை அமைத்தார் என்பது தலபுராணச் செய்தி. குரு என்றால் மஞ்சள் ஆடை, மஞ்சள் நிறமுள்ள பொருள்கள் , பொன் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இங்கு பொன்னாலான பொருள்கள் பூஜைக்குப் பயன் படுத்தப்படுகின்றன. இறைவனுக்கு நிவேதனம் படைக்கும் பொழுது கீழே சிந்தும் உணவுகளை எடுப்பதற்கு தங்க ஊசி பயன்படுத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது தீர்த்தத்தில் தங்க மீன்களும் தங்கத் தாமரை மலர்களும் இடப்படுகின்றன. தங்க சாமரம் கொண்டு சுவாமிக்கு ஆலவட்டத் தொண்டு (விசிறி விடுதல்) செய்கின்றனர். இது தவிர, தங்க ஆமை ஒன்றும் இருக்கிறது.
ஸ்கந்த புஷ்கரணி
‘‘செந்தூரின் கடல் ஓசை சங்கீதம்” என்பார்கள். முருகப்பெருமானை பிரணவ சத்தத்தோடு இங்குள்ள கடல் அலைகள் வணங்குகின்றன. சூரபத்மன் போன்ற அசுரர்களுடன் முருகப்பெருமான் போர் செய்த தலம் என்பதால், அவர்கள் குருதி பட்டு, கடல் நிறமும் இப்பகுதியில் சற்று சிவந்தே காணப்படுவதாக ஐதீகம். 24 தீர்த்தங்கள் இத்தலத்திற்கு உரியதாக இருக்கின்றன. காயத்ரி மந்திரத்திற்கு 24 எழுத்துக்கள் உண்டு. இங்குள்ள ஒவ்வொரு தீர்த்தமும் காயத்ரி மந்திரத்தின் அட்சரங்களாக விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு, அதன் பிறகு உப்புத்தண்ணீர் போக, கடற்கரை ஓரமாக அமைந்த நாழி கிணறு நல்ல தண்ணீரில் நீராடிவிட்டு, பின் தான் முருகப்பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும், இந்த நாழிக் கிணறு ‘‘ஸ்கந்த புஷ்கரணி” என்று அழைக்கப்படுகிறது.. ஒரு சிறு பாத்திரத்தில் முகக்கும் அளவுக்கு மட்டும் வற்றாத நீர் இருப்பதால் நாழிக் கிணறு என்று அழைக்கிறார்கள். முருகப்பெருமான் படைவீரர்களுக்கு தாகம் தீர்ப்பதற்காக தன்னுடைய வேலாயுதத்தால் ஏற்படுத்திய ஊற்று நாழிக் கிணறு.
அற்புதத் திருவிழாக்கள்
இனி இங்கு நடக்கும் அற்புதமான திருவிழாக்களைப் பற்றிப் பார்ப்போம். ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் பள்ளியறை தீபாராதனை முடிந்த பின் கொடிமரம் வணக்கம் செய்துவிட்டு தெற்கு வாசல் ( சண்முக விலாசம்) வந்து சூரிய வணக்கம் செய்வார்கள் அடியார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்றும் இது நடைபெறும். வைகாசி மாதம் விசாகப் பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அப்பொழுது கோயிலின் எதிரில் உள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி அகழி போல் நீர் நிரப்பி வைத்திருப்பார்கள். உச்சி கால பூஜை முடிந்தவுடன் முருகப்பெருமான் இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். ஆராதனைகள் முடிந்ததும் சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து கோயிலுக்குள் செல்வார். ஆவணிப் பெருவிழா, புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் கந்த சஷ்டி விழாவில் நடைபெறும் சூரசம்காரம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.சூர சம்ஹார விழாவைக் காண்பதற்கு லட்சோப லட்சம் மக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் திரள்வார்கள் திருவாதிரை அன்று நடராஜர் அபிஷேகத்திற்கு பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப்பெருமான் ஆபரணங்கள் அணிவிக் கப்படும். தை மாதம் பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் தனிச்சிறப்புமிக்க விழா.
எல்லா தோஷங்களும் நீக்கும் திருச்செந்தூர்
கோயிலின் கிழக்கு பிராகாரத்தில் அலையடிக்கும் அத்தனை அருகாமையில் உள்ள இத்திருக்கோயிலில் சூர சம்ஹார நாளில் கடல் சற்று உள்வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சூரசம்காரம் முடிந்தவுடன் செந்திலாண்டவர் அபிஷேகம் நடைபெறும். நேரடியாக அபிஷேகம் செய்யாமல் சுவாமிக்கு முன்னால் கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதை சாயா அபிஷேகம் என்பார்கள். இங்குள்ள கொடிமரத்திற்கும் ஒரு கதை உண்டு. இலங்கை கண்டியை ஆண்ட மன்னனின் கனவில் முருகன் தோன்றி சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் விடச் சொன்னான் . அது திருச்செந்தூர் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இச்செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில். இடம்பெற்றுள்ளது வாய் பேசாத குமரகுருபரர் இத்தலத்து முருகன் அருளால் கவிபாடும் புலமை பெற்றார். இக்கோயிலில் தங்கி சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் நினைத்த காரியங்கள் நடைபெறும். தீராத வயிற்று வலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நதியில் கந்த சஷ்டி கவசம் பாடினால் நோய் குணமாகும் என்று பாலதேவராய சுவாமிகள் கூறியிருப்பதைப் பின்பற்றி பல பக்தர்களும் குணமாகி இருக்கின்றார்கள். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை வைகாசி கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பதால் குழந்தைகளின் தோஷங்களும் பெற்றோர்களது தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை .
இப்படிப்பட்ட பெருமைமிக்க
திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு ஜூலை மாதம் ஏழாம் தேதி நடைபெறும் திருக்குடமுழுக்கு விழா காண அலை அலையாய் வாருங்கள். திருச்சீரலைவாய், திருச்சீர் (நல்வாழ்வு) அளிக்கும்.