புழல்: செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் புதர் செடி கொடிகள் புதர் மண்டிக்கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். செங்குன்றம் பி.டபிள்யூ.டி தெருவில் செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள வளாகத்தில் மரம் செடிகள் காடு போல் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இரவு நேரங்களில் அருகில் உள்ள பி.டபிள்யு.டி தெருவில் உள்ள வீடுகளில் பாம்புகள் புகுந்துவிடுவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் செங்குன்றம் பேரூராட்சி அதிகாரிகள் நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.