சென்னை: மூத்த தமிழறிஞர் சேதுராமன் இறப்பு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த தமிழறிஞர் சேதுராமன் உடல்நலக்குறைவு காரணமாக 91வது வயதில் காலமானார். அவரது இறப்புக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செல்வப்பெருந்தகை (காங்): வாழ்நாள் முழுவதும் தமிழ் அன்னைக்காகவே சேவை புரிந்தவர், பெரும் தொண்டாற்றியவர். நெஞ்ச தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் என ஒரு லட்சத்திற்கும் மேலான கவிதைகள், நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி தமிழன்னைக்கு புகழ் சேர்த்தவர். அவரது இழப்பு தமிழ் சமுதாயத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
வைகோ (மதிமுக): நெஞ்ச தோட்டம், தமிழ் முழக்கம், சேதுகாப்பியம், கலைஞர் காவியம் முதலான நூற்றுக்கணக்கான நூல்களையும், லட்சக்கணக்கான கவிதைகளையும் தமிழ் இலக்கியத்திற்கு அருட்கொடையாக வழங்கியவர் வா.மு.சேதுராமன். நேற்றைய முரசொலி நாளேட்டில், ‘ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை காப்போம் – தமிழர் ஒற்றுமையாய் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!’ என்ற அவரின் எழுச்சிக் கவிதையை படித்து மகிழ்ந்தேன். இன்றைக்கு அவர் இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை, ஆறா துயரை அளிக்கிறது.
அன்புமணி (பாமக): அன்னை தமிழுக்கு பணி செய்வதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த அவர், தமிழ் பாதுகாப்பு பணிகளுக்கு துணையாக இருந்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட ஏராளமான தமிழ் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். ஏராளமான நூல்களை எழுதிய அவர், பல விருதுகளையும் வென்றுள்ளார்.
சண்முகம் (மார்க்சிஸ்ட்): கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் என தன் வாழ்நாள் முழுவதும் எழுதி குவித்தவர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். பன்னாட்டு தமிழுறவு மன்றம் என்ற அமைப்பை நிறுவி உலக தமிழர்களின் உறவு பாலமாக திகழ்ந்தவர்.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழ் மொழியின் மேன்மை காக்க தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். தமிழ்ப்பணிக்காக மிகச்சிறப்பாக செயல்பட்ட போற்றுதலுக்குரியவர். அன்னாரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும் மிகழ்ப்பெரிய இழப்பாகும்.
ஜவாஹிருல்லா (மமக): ஈழ தமிழர்கள் பிரச்னைக்காகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். கலைஞரின் நேசத்தை பெற்றவர். சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்கு அரும்பாடுபட்டவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது.
மூத்த தமிழறிஞர் சேதுராமன் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல்
0