சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் எனக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அவரை கைது செய்தது சட்டவிரோதமாகும். மேகலாவின் ஆட்கொணர்வு மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட விதிகள் பின்பற்றப்பட்டுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.
மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால் வழக்கின் இறுதி முடிவை எட்ட வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்பதாகக் கூறி, செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை காவலை தீர்மானிக்க வழக்கை மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதை தலைமை நீதிபதி ஏற்று ஒப்புதல் அளித்த நிலையில், வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தான் அளித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதால், இந்த வழக்கில் சொல்வதற்கு ஏதுமில்லை என்று நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவல் குறித்து முடிவு செய்யவே மூன்றாவது நீதிபதி, வழக்கை இந்த அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார். மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் காவல் குறித்து தீர்மானிக்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் எனக் கூறி ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து தீர்ப்பளித்தனர்.