செங்கோட்டை, நவ.11: செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களின் கருத்துக்களை கேட்காமல் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்த நகர்மன்ற தலைவிக்கு கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக அறையை பூட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் 24 கவுன்சிலர்களில் 4 கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில், கூட்டத்தின் போது 14 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு 14 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கூட்டத்தை புறக்கணித்து நகராட்சி வளாகத்தில் நின்று கொண்டிருந்த மற்ற கவுன்சிலர்களிடம் தீர்மானம் நிறைவேறியதாக கையெழுத்து கேட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14 கவுன்சிலர்கள் செங்கோட்டை நகராட்சி ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமலேயே, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள், ஆணையாளரை சந்தித்து மனு கொடுக்க முயன்றனர்.
அப்போது, நகராட்சி கமிஷனர் அறையிலிருந்து வெளியே சென்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அறையில் இருந்த மற்ற ஊழியர்களும் வெளியே செல்ல முயற்சி செய்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கவுன்சிலர்கள் அறை கதவை பூட்டி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.