புழல்: செங்குன்றம் அடுத்த பம்மது குளம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள நூக்கல் அம்மன் கோயிலில், நேற்று இரவு ஆடித் திருவிழா முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்காக கோனிமேடு பகுதி சேர்ந்த சில இளைஞர்கள் திருவிழாவுக்கு சென்றனர். அப்பொழுது லட்சுமிபுரம் ஆலமரம் பகுதி அருகே இருந்த ஒரு பிரிவினருக்கும் கோணிமேடு சார்ந்த பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏன் இங்கு வந்தீர்கள்? நீங்கள் வரக்கூடாது என்று லட்சுமிபுரம் சேர்ந்த ஒரு பிரிவினர் உருட்டு கட்டைகள் எடுத்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதனால் பலர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் கோணிமேடு பெருமாள் கோயில் தெரு சேர்ந்த விக்னேஷ்(23) தலை முகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே கோயில் திருவிழாவுக்கு வந்த போலீசார் விக்னேஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விக்னேஷை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர்.