புழல்: பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் கடத்தலை தடுக்க குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றம் அடுத்த காந்திநகர் பகுதியில் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நெமிலிச்சேரி நோக்கி வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக 5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரி மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற செங்குன்றத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (45), மணிகண்டன் (எ) போண்டாமணி (47), லாரி ஓட்டுநரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவியரசன் (49) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரிடம் அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம், குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.