பந்தலூர் : திருப்பூர் குருதாணி அறக்கட்டளை மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் வயநாடு பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே வயநாடு மாவட்டம், வைத்திரி தாலுக்கா, மேப்பாடி அருகே முண்டக்கரை மற்றும் சூரல்மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பாதிக்கப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
வீடு, உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் குருதாணி அறக்கட்டளை மற்றும் திருப்பூர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேற்று சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான உணவு பொருட்கள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் கொண்டு சென்றனர். பந்தலூர் வழியாக சென்ற வாகனங்களுக்கு பந்தலூர் பஜாரில் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.