டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.ஜாமீன் கோரி செந்தில் பாலாஜியின் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலிருந்து உடனே தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஓகா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளது என நீதிபதி ஓகா தெரிவித்தார்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதிடப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பு, “கடந்த ஓராண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வழக்கில் விசாரணை முடியும் வரை ஒருவரை சிறையிலேயே வைத்திருக்க முடியாது. ஜாமின் கோரிய வழக்கில், அதுபற்றி பேசாமல் வழக்கறிஞர் நியமனம் குறித்து பேசுவது சரியல்ல. வழக்கில் கைப்பற்றியதாக கூறப்படும் ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் திருத்தம் செய்யப்பட்டவை. அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு பொருந்தும். செந்தில் பாலாஜி 5 முறை சட்டமன்ற உறுப்பினர், அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார்; எனவே ஜாமின் வழங்க வேண்டும்,”என்று வாதிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் எப்போதுதான் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் 3 மாதங்களில் விசாரணை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஏற்க மறுத்து நிராகரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.