சென்னை: கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டித் தொடர், அக்.26ம் தேதி முதல் நவ.9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 36 வகையான பிரிவுகளில் பங்கேற்க, தமிழ்நாட்டில் இருந்து 446 வீரர், வீரங்கனைகள் கோவா செல்கின்றனர். இவர்களுடன் 116 பயிற்சியாளர்கள், அலுவலர்கள், உதவியாளர்களும் பயணிக்கின்றனர். தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. அப்போது தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ், பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க இயக்குநர் ஹித்தேன் ஜோஷி உட்பட பல்வேறு விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற இலக்கு விரைவில் நனவாகும். அதற்கு முன்னோட்டமாக தான் ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கங்களை வென்றுள்ளோம். ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளை பாராட்ட விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். அதில் சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் தங்கள் பெற்றோருடன் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.