புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜ மாநில தலைவருக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி மாநில பாஜ தலைவர் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன். இவரது வீடு, லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டை புதுவீதியில் உள்ளது. இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு பெண் ஆடையின்றி ஆபாசமாக வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதை பார்த்து திடுக்கிட்ட சாமிநாதன், உடனடியாக அந்த வீடியோ அழைப்பை துண்டித்தார். அதன்பிறகு, வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார்.
அது, யூடியூப்பில் வீடியோ உள்ளடக்கத்தை பதிவேற்றுவதற்கான ஸ்கிரீன் ஷாட் படமாக இருந்தது. வாட்ஸ்அப்பில் அந்த பெண் ஆபாசமாக தோன்றிய வீடியோ அழைப்பை பதிவு செய்து அனுப்பியதுடன், மேலும் சாமிநாதன் பேசுவதுபோல் சித்தரித்தும் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு செல்போனில் வேறொரு நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் நபர், உடனடியாக ரூ.50 ஆயிரம் தராவிட்டால் ஆபாச வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து சாமிநாதன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்ததில் அந்த நபர், ராஜஸ்தானில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.