விழுப்புரம்: செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை அனுமதிக்காததால் வாகனங்களை நடுவழியில் நிறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று காலையில் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகள் வழக்கம் போல் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர்.
அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விவசாயிகளின் வாகனங்களை உள்ளே விட அதிகாரிகள் மறுத்தனர். அத்துடன் ஒழுங்குமுறை கூடம் நிர்வாகம் சார்பில் போஸ்டர் ஒட்டி முகப்பு வாயிலையும் மூடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.