செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை உள்ளது. இங்கு தொல்லியல் கழக நிறுவனர் லெனின், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி, வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செஞ்சிக்கோட்டை கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், அங்குள்ள ராஜகோபாலசுவாமி கோயில் வாயில் படியில் கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், செஞ்சி கோட்டையை முதலில் கட்டியவர் ஆனந்த கோன். அது தற்போது ராஜகிரி என அழைக்கப்படுகிறது. 2வதாக கிருஷ்ணகிரி கோட்டையை கிருஷ்ண கோன் கட்டினார். அடுத்து அவர்களின் வாரிசுகளான கோனேரிக் கோன், கோவிந்தக்கோன், புலியக்கோன் ஆகியோர் கோட்டையை விரிவுப்படுத்தினர். இவர்களின் காலம் கி.பி. 1200 முதல் துவங்கி கி.பி. 1330 வரை 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
இந்த தகவல்களை கர்நாடக ராஜாக்கள் மற்றும் நாராயணன் என்பவர் எழுதிய நூல்களிலும் அண்ணாமலை பல்கலை வரலாற்று பேராசிரியர் சீனிவாச்சாரி இந்திய தொல்லியல் துறை ஓய்வுபெற்ற அலுவலர் சேஷாத்திரியும் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையில் கிடைத்துள்ள கல்வெட்டில் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில் உள்ள எழுத்தின் பொருள் கோனேரிக்கோன் மகன் கோவிந்தன் சதா இறைவனை வணங்கிய நிலையில் உள்ளார் என்பதாகும். கோனேரி கோன் செஞ்சிக்கோட்டையை கி.பி. 1270 முதல் கி.பி. 1290 வரை ஆட்சி செய்துள்ளார். அவர் காலத்தில் இந்த கல்வெட்டு வடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் மூலம் செஞ்சிக்கோட்டையை கட்டியவர்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ள தகவல்களுக்கு உரிய கல்வெட்டு ஆதாரம் முதல் முறையாக கிடைத்துள்ளது, என்றனர்.