கல்காரி: கனடா ஓபன் பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் லக்ஷியா சென் தகுதி பெற்றார். காலிறுதியில் பெல்ஜியம் வீரர் ஜூலியன் கார்ரக்கியுடன் நேற்று மோதிய லக்ஷியா சென் 21-8, 17-21 21-10 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 57 நிமிடங்களுக்கு நீடித்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் களமிறங்கிய இந்திய நட்சத்திரம் சிந்து 21-13, 21-7 என்ற நேர் செட்களில் சீனாவின் ஃபாங் ஜி கோவை வீழ்த்தினார்.
இப்போட்டி 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சிந்து (17வது ரேங்க்) அரையிறுதியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் அகானே யாமகுச்சியுடன் மோத உள்ளார். சென் (19வது ரேங்க்) தனது அரையிறுதியில் ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை (11வது ரேங்க்) சந்திக்கிறார். அரையிறுதி முடிவு எப்படி இருந்தாலும், இருவரும் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் கிடைப்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.