திருவள்ளூர்: பூந்தமல்லி – ஆவடி சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்கியல் மற்றும் நிதித் துறையின் ஃபின்டெக் கிளப் சார்பில் ‘நேரடி வரி விதிப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் முனைவர் சாய் சத்தியவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் மோகேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாணவி ஸ்ரீமதி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இந்தக் கருத்தரங்கில் வருமான வரித்துறை அதிகாரி மு.வீரபாகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது இந்திய வரிவிதிப்பு வரலாற்றை எடுத்துரைத்தார். மேலும் 1860ல் வருமான வரியின் வருகையை பற்றியும், 1961ன் வருமான வரிச் சட்டத்தைப் பற்றியும் விளக்கினார். சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படைக் கட்டணம் மற்றும் வருமான வரி விதிப்பு பற்றி சுருக்கமாக விளக்கினார். மேலும் அவர் நிகர மற்றும் மொத்த வருமானம் பற்றிய கருத்தையும், தவிர்த்தல் மற்றும் வரி ஏய்ப்பு பற்றிய அம்சங்களைப் பற்றி கூறிய அவர், தனிநபர் வருமானம் மற்றும் ரசீதுகள் போன்ற சில அடிப்படை வரையறைகளை பற்றியும் விளக்கினார். முடிவில் மாணவி பரணி நன்றி கூறினார்.