சென்னை,: முன்னாள், மூத்த வீரர்கள், வீரர்களுக்கான முதலாவது மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் அரையிறுதியில் தமிழ்நாடு-சண்டீகர் மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. லீக் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத தமிழ்நாடு, காலிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.
லீக் சுற்றில் 2ல் ஒரு வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறிய சண்டீகர், அதில் அரியானாவுடன் மோதியது. டிராவில் முடிந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றிப் பெற்ற சண்டீகர் அரையிறுதியில் தமிழ்நாட்டை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய சில வினாடிகளில் தமிழ்நாடு வீரர் ஏ.பி.வினோத் குமார் ஃபீல்டு கோலடித்து அணிக்கு முதல் நிமிடத்திலேயே முன்னிலைப் பெற்று தந்தார்.
அதன் பிறகு இரு அணிகளும் மேற்கொண்ட கோலடிக்கும் முயற்சிகள் பலன் தரவில்லை.
அதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்று இருந்தது. தொடர்ந்து 2வது பாதியில் தமிழ்நாடு வீரர்கள் கோலடிக்கும் முயற்சிகளை அதிகரித்தனர். அதனால் 40வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை எஸ்.சுதர்சன் கோலாக மாற்றினார். அடுத்து 54வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பும் கேப்டன் ஆடம் ஆன்டனியால் கோலானது.
சண்டீகரின் எந்த முயற்சியும் கோலாக மாறவில்லை. அதனால் ஆட்டத்தின் முடிவில் தமிழ்நாடு 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது. தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதியில் மகாராஷ்டிரா 4-1 என்ற கோல் கணக்கில் வலிமையான ஒடிஷா அணியை வீழ்த்தியது. அதனால் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – மகாராஷ்டிரா அணிகள் மோத உள்ளன.