விழுப்புரம்: தைலாபுரத்தில் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென சந்தித்து பேசினார். தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளே தற்போது வெளியேறும் சூழல் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜ, அதிமுகவை மிரட்டி கூட்டணிக்குள் இழுத்துள்ள நிலையில், பாமகவுக்கும் வலைவீசி வருகிறது. மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையும் ரகசியமாக நடத்தி வருகிறது.
ஆனால் பாமகவில் அன்புமணி பாஜ பக்கம் சாய்ந்துள்ள நிலையில், நிறுவனர் ராமதாஸ் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என்று பிடிவாதமாக உள்ளார். இதனால் அவரை சமாதானம் செய்ய பாஜ தூதர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையிலும் எந்த பிடியும் கொடுக்காமல் சாதுர்யமாக காய்நகர்த்தி வருகிறார். இதனால் பாமகவை சிதைக்க சில நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவின. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மதியம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசினர்.