சென்னை: நேற்று அரசுமுறை பயணமாக சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: மேகதாதுவில் எந்த அணையும் கட்டக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அந்தத் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது. ஒருபோதும் இதற்கு அனுமதி பெறவும் முடியாது. எந்த ஆட்சியாக இருந்தாலும் அனுமதி கொடுக்க வாய்ப்பு இல்லை. மேகதாது பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது பற்றி பேசலாம். தமிழக மக்கள் ஒரு போதும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது. எங்களுடைய உரிமையை ஒருபோதும் காங்கிரஸ் பேரியக்கம் விட்டுக் கொடுக்காது. இவ்வாறு அவர் கூறினார். சந்திப்பின்போது மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.