உலகையே தனது அருட்பார்வையால் ஆண்டு கொண்டிருக்கும் சிவபெருமான் பல்வேறு பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு துணையாக உமையாளும் ( பார்வதி) பக்தர்களின் குறை தீர்த்து வருகிறார். அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் திருபுவனை அடுத்துள்ள தமிழக பகுதியான (விழுப்புரம் மாவட்டம்) விக்கிரவாண்டி வட்டம் சேஷங்கனூர் கிராமத்தில் அன்புபுரீஸ்வரி சமேத அழகேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
பாண்டியர் கால கல்வெட்டுகளின் படி பாண்டிய மன்னன் மாற வர்மன் பராக்கிராம பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த கல்வெட்டில் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகள் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. மாறவர்மன் குணசேகர பாண்டியனின் 21 வது ஆட்சி ஆண்டு கி.பி 1289 ஆம் ஆண்டின் கல்வெட்டு மண்டபத் திருப்பணிக்கு வரி விதித்த முறைகளை தெரிவிக்கிறது. சேஷாங்கனூரின் பழைய பெயர் செழியகங்கநல்லூர் ஆகும்.
அருள்பாலிக்கும் தெய்வங்கள்
இந்த ஊரில் குடிகொண்டு அருள்பாலிக்கும் அன்பு புரீஸ்வரி அம்மன் உடனுறை அழகேஸ்வரர் கோயில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் ஸ்ரீஅழகேஸ்வரர், அன்பு புரீஸ்வரி அம்மன். வானநிவாச வரசித்தி விநாயகர், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி,,ஏழை முத்து மாரியம்மன், பூரணி பொற்கலை அய்யனாரப்பன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ராகு கேது, பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். இது தவிர லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியும் தனியாக உள்ளது.
அனைத்து செல்வங்களும் பெருகும்
இங்குள்ள சிவபெருமானை ஆத்மா சுத்தியுடன் வழிபட குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் எழும் கருத்து வேறுபாடுகள், முரண்பட்ட நிலைப்பாடுகள், மனசஞ்சலம் அனைத்தும் நீங்கி தம்பதியர் குடும்ப ஒற்றுமை மேலோங்க வாழ்வார்கள் என்பது பக்தர்களின் ஐதீகம். மேலும் வீடு நிலம் சொத்துக்கு சம்பந்தமாக சட்ட சிக்கல் தீரும், சகோதர ஒற்றுமை மேலோங்கும், எதிரிகளால் ஏற்படும் பயம், விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் நீங்கும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நீங்கும்.
இருபாலருக்கும் ஏற்படும் சர்ப்பதோஷம் குறிப்பாக ஆனந்தகால சர்ப்பயோகம் என்னும் தோஷம் நீங்க தங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திரம் வரும் நாளில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் தீபம் நெய்வேத்தியம் மற்றும் நாகலிங்கப்பூ அல்லது நொச்சி இலை, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட அவர்களின் குறைகள் அகலும் என்பது ஐதீகம்.
அன்பு புரீஸ்வரி சமேத அழகேஸ்வரரை மனமுருக வழிபட்டால் அனைத்து செல்வங்களும் நம்மை வந்து சேரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மேலும் இங்கு தற்போது ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இங்கு திருமணம் நடந்தால் தம்பதியர் நலமுடன்வாழ்வார்கள், குழந்தைப்பேறு, குடும்ப ஒற்றுமை உள்ளிட்ட பல நன்மைகள் உண்டாகும் என்ற நம்பிக்கையில் இங்கு திருமணம் செய்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறப்பு பூஜைகள்
தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி பூஜை, குருபூஜை, சதுர்த்தி விழா, பிரதோஷம், அமாவாசை பூஜை, நவக்கிரக ஹோமம், அன்னாபிஷேகம், சஷ்டி பூஜை உள்ளிட்ட பூஜைகள் சிறப்பாக நடந்து வருகிறது. ராகுகேது பரிகார தலமாக இக்கோயில் விளங்குகிறது.
செல்வது எப்படி?
புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வழியாக சன்னியாசிகுப்பம் செல்லும் பேருந்தில் ஏறி சன்னியாசி குப்பத்தில் இறங்கி சேஷாங்கனூர் அழகேஸ்வரர் கோயிலுக்கு செல்லலாம். விழுப்புரத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.