மதுரை: ராணுவத்திற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் அளித்த பேட்டியில், ‘போரில் ராணுவ வீரர்கள் எங்க சண்டை போட்டார்கள். பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வாங்கி கொடுத்த அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வைத்துதான் சண்டை போட்டார்கள். இதனால் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களைதான் பாராட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசிலும் புகார் அளித்து உள்ளனர். மேலும், செல்லூர் ராஜூ எங்கு தேர்தலில் நின்றாலும் அவரை தோற்கடிப்போம் என்று தீர்மானம் போட்டுள்ளனர்.
இந்நிலையில், ராணுவத்தை குறித்து பேசியதற்கு செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்திய நாட்டை கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து வரும் என்னுடைய உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் என்றும் வணங்குபவன். அவர்களின் தியாகத்தை வணங்குபவன். ஏற்கனவே மறுத்து எனது எக்ஸ் தளத்தில் உடனடியாக பதில் பதிவிட்டுள்ளேன். ஆனாலும் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருக்குமேயானால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய குடும்பம் முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.