திருமலை : விற்பனை நேரம் முடிந்ததால் மது விற்பனை செய்ய முடியாது என ஊழியர்கள் கூறியதால் ஆத்திரமடைந்த வாலிபர், கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் ₹1.5 லட்சம் பொருட்கள் சேதமானது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவில் அரசு ஒயின் ஷாப் உள்ளது. கடந்த 11ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து கணக்குகளை சரிபார்த்து கடையை மூடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மது (26) என்பவர், கடைக்கு வந்தார்.
அவர் தனக்கு மதுபானம் வேண்டும் எனக்கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் விற்பனை நேரம் முடிந்து கடையை மூட உள்ளோம். இப்போது மது விற்பனை செய்ய முடியாது எனக்கூறியுள்ளனர். இதனால் மது, ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஒயின்ஷாப்பில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மது பெட்ரோல் கேனுடன் வந்து கடை மீதும், ஊழியர்கள் மீதும் ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதற்கிடையில் மது, கடைக்கு தீ வைத்தார். தீ மளமளவென ஒயின்ஷாப் முழுவதும் பரவியது. தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் கடை முழுவதும் எரிந்து சேதமானது.
உள்ளே இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கருகியது. இதில் ₹1.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடை ஊழியர்கள் அளித்த புகாரின்படி பொதினமல்லயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய மதுவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.