சென்னை:சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் கோயில் வைகாசி விசாக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது: இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக நடந்த குடமுழுக்குகள் நான்காண்டுகளில் 300வது திருக்கோயில் குடமுழுக்கு கடந்த 5ம் தேதி திருப்புகலூரில் அக்னிஸ்வரர் திருக்கோயிலில் வெற்றிகரமாக மகிழ்ச்சிகரமாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 திருக்கோயிலின் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும். 4,000 திருக்கோயிலின் திருப்பணிகளை நிறைவு செய்கின்ற நோக்கத்தோடு எங்களுடைய துறை விரைவான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
முருகன் மாநாடு முழுக்க முழுக்க சங்கீகள் நடத்துகின்ற மாநாடு. அரசு சார்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் 27 நாடுகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் பங்கேற்றார்கள். அரசியல் சூழ்நிலைக்காக மதத்தால், இனத்தால் மக்களை எப்படியெல்லாம் பிளவுபடுத்த முடியுமோ அந்த பிளவுக்கு உண்டான ஆயுதமாக இந்த மாநாட்டை பயன்படுத்த நினைக்கின்றார்கள். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவக்குமார், திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வெற்றிகுமார் மற்றும் அறங்காவலர்கள் உதயகுமார், ரத்தினம், லீலாவதி, கோபிநாத், மாமன்ற உறுப்பினர்கள் வேலு, பரிதிஇளம்சுரிதி, ராஜேஸ்வரி தர், செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.