சென்னை: போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை மாநகர காவல் எல்லையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் மற்றும் தெருக்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மாநகர பகுதிகளில் சாலையோரம் கேட்பாரற்று நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை எழும்பூரில் உள்ள நரியங்காடு காவலர் குடியிருப்பு, சித்ரா தியேட்டர் அருகே மற்றும் எல்.ஜி.சாலைகளில் நேற்று மாநகர போக்குவரத்து கிழக்கு மண்டல துணை கமிஷனர் சமய்சிங் மீனா தலைமையிலான போலீசார் கேட்பாரற்று நிறுத்தப்பட்ட கார், ஆட்டோ, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தாத வாகன உரிமையாளர்களின் வாகனங்கள் போக்குவரத்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில் நேரடியாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் எழுப்பூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.