ஆவடி: ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் ஊழியர் உட்பட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடியை அடுத்து அயப்பாக்கம் பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இங்கு, ரேஷன் பொருள் வழங்கும் ரேஷன் கடை இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசி வெளிச்சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள், காவல்துறை கண்காணிப்பாளர் கீதா தலைமையில், காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் தலைமையில் தனிப்படை ஆய்வாளர் ஹேமலதா மற்றும் உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசாருடன் மறைந்திருந்து நேற்றுமுன்தினம் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பாலாஜி கேட்டரிங் சர்வீஸ் பகுதி வழியே வந்த ஜனார்த்தனன் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டு அருகில் மறைத்து வைத்திருந்த 25 கிலோ எடை கொண்ட 20 அரிசி மூட்டைகளை அடையாளம் காட்டவே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனம்(68) மற்றும் சிந்தாமணி ரேஷன் கடையில் பணிபுரியும் மைதிலி(43) ஆகிய இருவரும் சேர்ந்து ரேஷன் அரிசி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்த போலீசார், இவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.