விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்தவர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் வைத்திருந்த பணம், நகை மற்றும் வங்கி பாஸ் புக், ஆதார் அட்டை ஆகியவைகளை ஜன்னல் வழியாக வீசி விட்டு தப்ப முயன்றனர்.
அவர்களை பிடித்து சோதனை செய்து, கணக்கில் வராத ரூ.2,28,760 ரொக்க பணம் மற்றும் 4 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அருகே உள்ள ஆவண எழுத்தர் அலுவலகங்களிலும் சோதனை செய்தனர். இதை தொடர்ந்து சார்பதிவாளர் ரமேஷ் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆவண எழுத்தர், இடை தரகர்கள், தனி நபர்கள் என 10 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.