கும்மிடிப்பூண்டி: பெருவாயில் பகுதியில் மாற்றுதிறனாளி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் உள்ள பாதாள அறையில் 35 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநில வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கிராமப்புறங்களில் கஞ்சா விற்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் சப் – இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் பெருவாயில், புதுவாயில் ஆகிய பகுதிகளில் மக்களோடு மக்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பெருவாயில் பகுதியில் இருந்து செங்குன்றத்தை நோக்கி பைக்கில் மாற்றுத் திறனாளி ஒருவர் வந்து கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவரிடமிருந்து எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. உடனடியாக அவரது இருசக்கர வாகனத்துடன் கவரப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து அவர் ஓட்டி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். மாற்றுத் திறனாளிக்காக தயார் செய்யப்பட்ட அந்த பைக்கில் பாதாள அறை போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில், சுமார் 18 பண்டல் பண்டலாக மொத்தம் சுமார் 35 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் ரிவானே(42) என தெரியவந்தது. இவர் ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த, இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி பெருவாயில் தங்கி இருந்து அதனை ஒவ்வொரு கிலோவாக பொன்னேரி, செங்குன்றம், மாதவரம், கும்மிடிப்பூண்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் விற்கப்படுவதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.