அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்துவருவதாக இன்ஸ்பெக்டர் கிருபாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் அமைந்தகரையில் உள்ள ஒரு பெட்டி கடைகளில் கண்காணித்தபோது பைக்கில் ஒருவாலிபர் குட்கா விற்பனை செய்யும்போது வாலிபரை பிடித்து நடத்திய விசாரணையில், ‘’அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த முகமதுசபியுல்லா(32) என்பதும் குடோனில் குட்காவை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. உடனே அந்த குடோனின் பூட்டை உடைத்து 98 கிலோ குட்காவை பறிமுதல் செய்து முகமதுசபியுல்லாவை கைது செய்தனர்.
கடந்த 10 மாதங்களாக குடோனில் குட்காவை பதுக்கிவைத்து அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு அண்ணாநகர் மற்றும் கோயம்பேடு மார்க்கெட், நெற்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் உள்ள பெட்டி கடை, மளிகை கடைகளில் விற்பனை செய்துள்ளார் என்று தெரியவந்தது.
திருமங்கலம் என்.வி. ஜங்ஷன் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கிவரும் டீ கடையில் குட்கா விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவல்படி, திருமங்கலம் போலீசார் அந்த டீ கடையை சோதனை செய்தபோது சுமார் 2 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து கடையின் உரிமையாளர் சிவராமன்(52) கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.