சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடைபெற்ற சையது மவுலானா தர்கா கந்தூரி விழாவில் நபிகள் நாயகத்தின் வம்சாவழியினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் ஜமாலியா சையது மவுலானா தர்கா உள்ளது. இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சாவழி பேரன் ஜமாலியா சையது யாசின் மௌலானா கீழ் திசை நாடுகளில் இஸ்லாம் மதத்தை பரப்பியதாக கூறப்படுகிறது.
இவர் இறுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசலில் 1964ம் ஆண்டு முக்தியடைந்தார். அவர் இறைவனடி சேர்ந்த நாளே ஆண்டு தோறும் கந்தூரி விழாவாக நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற சந்தன கூடு நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் மட்டுமல்லாது. துபாய், லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் சந்தன கூடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சையது யாசின் மௌலானா சமாதியில் சந்தானம் பூசும் வைபவம் விமர்சையாக நடைபெற்றது.