சென்னை: தமிழர்களிடமிருந்து கட்சிக்கு பெறப்படும் திரள் நிதியின் மூலம், சீமான் பலகோடி ரூபாயில் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி புதிதாக புரட்சித் தமிழர் என்ற கட்சியை உருவாக்கி இருப்பதாக, அதன் ஒருங்கிணைப்பாளரான ராஜா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சியை வாரிசு கட்சியாக மாற்றி சீமான் அவருடைய மனைவி மற்றும் மகனை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார்.
அந்த கட்சியை சீமான் உருவாக்கவில்லை, பல தமிழ் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது. பிரபாகரனையே தான் அறிமுகப்படுத்தியது போன்று சீமான் மேடைகளில் பேசி வருவது ஏற்புடையதாக இல்லை. ஓரளவிற்கான வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி அடைந்துள்ளது. அதற்கு சீமான் மட்டும் அல்ல, அதில் உள்ள தொண்டர்களும் தான் முக்கிய காரணம். உலகத் தமிழர்கள் திரள் நிதியின்மூலமாக அதிகளவு வருவாய் கிடைக்கிறது. அதில் சீமான், அவரது மனைவி மற்றும் அவர் பெயரில் சொத்துகள் வாங்கியுள்ளார். 2011ல் சசிகலாவிடம் இருந்து ரூ.13 கோடி சீமான் பெற்றுள்ளார். இதுபோன்ற தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளிடம் வேட்பாளர் அறிவிக்கும்பொழுது பணத்தை பெற்றுள்ளார்.